அபாய வலயங்கள் தவிர்ந்த 18 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு சட்டம் தளர்வு

கொரோனா அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 18 மாவட்டங்களின் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த 18 மாவட்டங்களிலும் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது இன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

அதேவேளை மறு அறிவித்தல் வரை இந்த மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையில் தினமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ற போதும் கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொட, அக்குரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

இந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் இன்று முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரிவுகளில் எதிர்வரும் 22ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனை, கிரேன்பாஸ், பம்பலபிட்டி, வாழைத்தோட்டம், மருதானை, கொத்தட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸை, தெஹிவளை மற்றும் கொஹூவளை பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல, கொச்சிக்கடை மற்றும் சீதுவ பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம், மாரவில மற்றும் வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தொடந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.