கொழும்பு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து திருட்டுத்தனமாக பாரவூர்திகளில் வந்த ஏழு பேரும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் முதற்கட்ட விசாரணையில் உண்மையை கூறாமல் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதனால் யாழ் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது.
இந்த நிலையில் , அவர்களை “முறையாக கவனித்து“ விசாரணை செய்ய பலாலி தனிமைப்படுத்தல் அனுப்பி வைப்பதுடன் அங்கு உண்மையை கறக்கும் விசாரணையும் நடைபெறுமென தெரிகிறது.
கொரோனா அபாய வலயத்திலிருந்து எந்த சமூகப்பொறுப்புமில்லாமல் யாழுக்குள் இவர்கள் நுழைந்தமையானது , யாழ்ப்பாண மக்களை மேலும் பீதிக்குள் ஆழ்த்தியுள்ளது.
சுவிஸ் போதகரினால் ஏற்பட்ட அச்சுறுத்தல் தற்போதுதான் ஓய்ந்துள்ள நிலையில், குறித்த 7 பேரின் நடவடிக்கை யாழ்ப்பாணத்தை மீளவும் அபாயத்தில் ஆழ்த்தியுள்ளது.
யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர், நாவற்குழி, தெல்லிப்பளை, தொல்புரம் மற்றும் சங்கானையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு இரகசியமாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்தனர்.
கொழும்பு டாம் வீதியில் தங்கியிருந்த ஒருவர் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தொல்புரத்திலுள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதை அவதானித்த அயலவர்கள், கிராமசேவகரிடம் விடயத்தை தெரிவித்ததை அடுத்து உடனடியாக செயற்பட்ட கிராமசேவகர் அவரை தனிமைப்படுத்தினார். அவரது இரண்டு பிள்ளைகள், தாயார், சகோதரி ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
டாம் வீதியிலுள்ள புத்தகக்கடையில் பணியாற்றி வந்த இவர், லொறியில் இரகசியமாக யாழ்ப்பாணத்திற்குள் வந்ததை ஏற்றுக்கொண்டார். எனினும், யாருடைய லொறியில் வந்தார், எவ்வளவு பணம் செலுத்தினார் என்ற விடயங்களை அவர் கூற மறுத்து விட்டார்.
அதன் பின்னர் அவர் நேற்று மாலை பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அதேபோல யாழ்ப்பாணத்திற்குள் திருட்டுத்தனமாக நுழைந்த இன்னொருவர் சங்கானை தேவாலய வீதியில் கண்டுபிடிக்கப்பட்டார். மாலை 5.30 அளவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் ஐந்து பேருடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்ததாக தெரிவித்த அவர் , 4 நாட்கள் தொடர்ந்து நடந்து யாழை அடைந்தாக அவர் தெரிவித்த போதும் , தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களும் லொறியிலேயே வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து ஏனைய ஐவரும் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் இவர்களும் டாம் வீதியில் தங்கியிருந்து கட்டிட வேலையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அவர்களும் பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படவுள்ள நிலையில் , அவர்களை திருட்டுத்தனமாக ஏற்றி வந்த லொறிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.






