பதுளை பெண் அதிபரை மண்டியிட வைத்ததன் எதிரொலி: முதலமைச்சர் பதவி விலகல்!

பதுளை தமிழ் பெண் அதிபரை மண்டியிட வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத், தொடர் அழுத்தங்களையடுத்து கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் நிறைவு பெறும் வரை தாம் அந்தப் பதவியை மீண்டும் பொறுப்பேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சர் தனக்கு வேண்டப்பட்டவர் ஒருவரின் புதல்விக்கு பதுளை பாடசாலையில் அனுமதி கோரி சிபாரிசு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார். எனினும் பாடசாலையின் அதிபர் அந்த சிபாரிசு கடிதத்தினை நிராகரித்துள்ளதோடு, பாடசாலை அனுமதியினையும் மறுத்து தான் கல்வி அமைச்சிக்கு கட்டுப்பட்டே பணியாற்றுவதாகவும், அரசியல்வாதிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பணியாற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அறிந்த முதலமைச்சர், சம்பந்தப்பட்ட அதிபரை தன் வீட்டுக்கு அழைத்துவந்து அவரை தன்முன் பலவந்தமாக மண்டியிட்டு மன்னிப்பு கோரவைத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பாரிய சர்ச்சை தோற்றுவித்துள்ள நிலையில், நாடாளவிய ரீதியில் ஊவா மாகாண முதலமைச்சருக்கெதிராக கோஷங்களும் கண்டனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.