இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பொங்கல் பண்டிகை!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முதன்முறையாக பொங்கல் விழா நடக்க இருக்கிறது என்பதை ஏற்கெனவே நமது மின்னம்பலத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதன்படியே 17ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வானது நாடாளுமன்ற ஜூபிலி அரங்கில் முதன்முறையாக நடைபெற்றது.

தைப்பொங்கல் விழாவைத் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் (APPG T) பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) இணைந்து ஒழுங்குபடுத்தியிருந்தது.

நிகழ்வானது அக வணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ் பாட சாலை சிறுவர்களின் பொங்கல் விழா உரை என்பவற்றுடன் ஆரம்பமானது.

அதைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் தைத்திருநாள் விழா கொண்டாடப்படும் முறையையும் அதன் சிறப்பையும் உணர்த்தும் காணொளித் தொகுப்பு ஒன்று காண்பிக்கப்பட்டது. அரங்கம் நிறைந்த இந்த நிகழ்வில் தமிழ் பாட சாலைகள், கோயில்கள், மதகுருமார்கள், சமூக ஆர்வலர்கள் , பெண்கள், இளைஞர்கள் மற்றும் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழு (APPG T) தலைவர் Paul Scully MP உரையாற்றும்போது, “உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் இந்த நாளில் இலங்கை அரசு தேசிய இனப்பிரச்னைக்குச் சிறந்த அணுகுமுறைகளை முன்னெடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

வட அயர்லாந்துக்கான முன்னாள் அமைச்சர் Rt Hon Teresa Villiers MP பேசுகையில், தமிழ் மக்களின் செழுமையான கலாச்சார பங்களிப்பினை பாராட்டியதுடன் தமிழ் மக்களின் நீதிக்கும் நிரந்தர சமாதானத்துக்குமான தேடலுக்கு தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். பிரித்தானியாவில் உள்ள தமிழர்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதற்கான நல்லதொரு சந்தர்ப்பமாக இந்நாள் அமைவதுடன், பிரித்தானிய நாட்டின் கலாசாரம், பொருளாதாரம், பொதுச் சேவைகள் போன்றவற்றுக்கான தமிழ் மக்களின் மிகப்பெரிய பங்களிப்புக்காகத் தனது நன்றியை தெரிவித்திருந்தார்.

“உங்களுக்கு நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அளவில் உறுதியான நண்பர்கள் இருக்கிறார்கள். எனது தொகுதியிலும் பிரித்தானிய முழுவதிலும் உள்ள தமிழ் மக்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமையடைகிறேன்” எனவும் அவர் பேசினார்.

Rt.Hon. Stephen Timms MP உரையாற்றுகையில், “East Ham பிரதான வீதியில் மட்டும் 114க்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்குத் தமிழர்கள் உரிமையாளராக உள்ளனர். தமிழர்களின் இந்த நாட்டுக்கான பொருளாதாரப் பங்களிப்பு வருடா வருடம் அதிகரித்துவருகிறது. இதை நான் பாராட்டுகிறேன்” என்றவர், பிரதான எதிர்க்கட்சி தலைவரும் தொழில்கட்சி தலைவருமான Rt.Hon. Jeremy Corbyn இந்நிகழ்வுக்கு வழங்கிய சிறப்பு செய்தியை வாசித்தார்.

“இந்த நாட்டிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அறுவடை தினத்தை தைப்பொங்கல் தினமாகக் கொண்டாடுகின்றனர். நன்றி தெரிவிப்பதற்கும், அன்புக்குரியவர்களுடன் ஒன்று சேருவதற்கும் மற்றும் எதிர்காலத்துக்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் தை பொங்கல் தினம் இடமளிக்கிறது. பிரித்தானிய தமிழ் மக்கள் இந்நாடு முழுவதிலும் உள்ள சமூகங்கள் மத்தியில் முக்கியமான பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். பிரித்தானியாவின் பன்முகப்பட்ட தன்மை, சகிப்புத்தன்மை, மற்றும் உயிர்த் துடிப்பான பிரித்தானியாவுக்குத் தமிழ் மக்கள் ஒரு முக்கியமான அங்கமாகும். இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் இலங்கை அரசு தமிழ் மக்களின் நீதிக்கும், நல்லிணக்கத்துக்கும் சரியான நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்துவதில் எமது அரசாங்கம் தலைமை தாங்க வேண்டும்” என Rt.Hon. Jeremy Corbyn தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஜூபிலி ஹாலில் முதன்முறையாக தமிழர் திருநாளான பொங்கல் கொண்டாடப்பட்டது, லண்டன் வாழ் தமிழர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like