மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த மீன்பிடிக்க கடலுக்குச் சென்று காணாமல் போயிருந்த மீனவர் ஒருவர் மூன்று நாட்களான நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் வங்காலை 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரான சென்ஜோண்குணசீலன் குருஸ்(வயது 50) எனத் தெரிய வந்துள்ளது. குறித்த மீனவர் கடந்த புதன்கிழமை காலை படகு ஒன்றில் மீன் பிடிக்க தனியாக கடலுக்குச் சென்றுள்ளார். மேலும் குறித்த மீனவர் உரிய நேரத்திற்கு வீடு திரும்பாத நிலையில் நூற்றுக்கணக்கான சக மீனவர்கள் தொடர்ச்சியாக இரு தினங்கள் கடலில் சென்று தேடிய போது படகு மாத்திரம் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் குறித்த மீனவர் கண்டு பிடிக்கப்படவில்லை. தற்போது மீட்கப்பட்ட சடலம் சக மீனவர்களினால் கரைக்கு கொண்டுவரப்பட்டு வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைத்த பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







