இலங்கையில் தீவிரமடையும் கொரோனா – 1000 சடலங்களை பொதிசெய்யும் உறைகளை கோரும் அரசாங்கம்

கொரோனா வைரஸால் இறக்கும் உடல்களை அகற்றுவதற்காக ஆயிரம் பாதுகாப்பான உறைகள் வழங்குமாறு செஞ்சிலுவை சங்கத்தை கேட்டு சுகாதார அமைச்சு கடிதம் ஒன்றை இலங்கை அனுப்பியுள்ளது.

அமைச்சின் மேலதிக செயலாளர் (சுகாதார சேவைகள்) டொக்டர் சுனில் டி அல்விஸ் கையெழுத்துடன் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சமூக வலைத்தள்ங்களில் முதலில் வெளிவந்த இக் கடிதம் தொடர்பில் விசாரித்தபோது அத்தகைய கடிதம் அனுப்பப்பட்டதாக மேலதிக செயலாளர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

இருப்பினும் இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாக இல்லை என்றும் செஞ்சிலுவை சங்கத்தின் கோரிக்கைக்கமைய இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

தேவைப்பட்டால் பயன்படுத்த, நாட்டில் பாதுகாப்பான உறைகள் இல்லை என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னர் வலியுறுத்திய பின்னர், இதுபோன்ற 1,000 உறைகளை வழங்க முடியுமென செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இருப்பினும், செஞ்சிலுவைச் சங்க நிர்வாக நடைமுறைகளின்படி எழுத்துமூலம் கோரிக்கை விடுக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், கொரோனாவால் தகனம் செய்யப்படும் உடல்களுக்கு மாத்திரமன்றி மீண்டும் தோண்டக்கூடிய சந்தேகம் உள்ள சடலங்களை அடக்கம் செய்யவும் இவை பயன்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் இவை எதற்காக கொள்வனவு செய்யப்படுகின்றது? இலங்கையில் 1000 மரணங்கள் நிகழப்போகின்றதா? என கேள்விகள் எழுப்படுகின்றது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.