விடுதலைப்புலிகளின் தலைவரை இழிவுபடுத்தும் காட்சி -மன்னிப்பு கோரினார் நடிகர்

பிரபாகரன் என்ற பெயரை வரனே அவஸ்யமுன்ட் படத்தில் நகைச்சுவையாக பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

துல்கர் சல்மான், சுரேஷ் கோபி, கல்யானி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடித்து பெப்ரவரி மாதம் வெளியான படம் வரனே அவஸ்யமுன்ட்.

அந்தப் படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சியில் நாயை பிரபாகரன் என்று அழைக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இழிவுபடுத்துவது போல இந்தக் காட்சி அமைந்திருப்பதாக துல்கர் சல்மான் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்தநிலையில், அந்தக் காட்சிக்கு துல்கர் சல்மான் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ’வரனே அவஸ்யமுன்ட் படத்திலுள்ள பிரபாகரன் நகைச்சுவைக் காட்சி தமிழ் மக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்று பலரும் என்னுடைய கவனத்துக்கு கொண்டுவந்தனர். இந்த காட்சி உள்நோக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட்டது அல்ல. அந்த நகைச்சுவைக் காட்சி பழைய மலையாளப் படமான பட்டனா பிரவேஷம் படத்தைக் குறிப்பிடும் காட்சி.

இது கேரளாவில் மிகவும் பிரபலமான மீம். பிரபாகரன் என்பது கேரளாவில் மிகவும் இயல்பான பெயர். அதனால், படத்தில் தொடக்கத்தில் போடப்பட்ட அறிவிப்பின்படி, அந்தப் பெயர் உயிருடன் உள்ள யாரை அல்லது மறைந்த யாரை குறிப்பிடப்படவில்லை.

இந்தப் படத்தைப் பார்க்காமல் பலர் இதற்கு எதிர்வினையாற்றுகிறார்கள். வெறுப்பை பரப்ப முயற்சிக்கிறார்கள். என்னை வெறுப்பதோ அல்லது என்னுடைய இயக்குநர் அனுப்பை வெறுப்பதையோ நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதை எங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

எங்களுடைய தந்தைகளை திட்டுவதோ அல்லது படத்தில் நடித்த மூத்த நடிகர்களைத் திட்டுவதோ வேண்டாம். அந்தக் காட்சியால் காயம்பட்ட நல்ல மற்றும் அன்பான தமிழ் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய படத்தின் மூலமோ என்னுடைய வார்த்தைகளின் மூலமோ யார் குறித்தும் அவதூறு பரப்ப வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. இது தவறான புரிதலின் விளைவு’ என்று குறிப்பிட்டுள்ளார்.