நாடு முழுவதிலும் இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரையும், முகாம்களுக்கு மீள அழைத்து வருவதை இலகுபடுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளைய தினம் அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு, பின்னர் இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படவுள்ளது.
முன்னதாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்றைய தினம் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் படி முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் குறுகிய கால விடுமுறைகள் என்பன மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்;டுள்ளன.
எனவே, இதுவரையில் விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரும், தங்களின் முகாம்களுக்கு திரும்ப வேண்டும் என்றும், அதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் போக்குவரத்து வசதிகள் கிடைக்காத முப்படையினை சேர்ந்த சிப்பாய்கள் தங்களுக்கு அருகில் உள்ள முகாமில் முன்னிலையாகுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.






