யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மோதல்!

யாழ்.பல்கலைகழகத்தில் கல்விகற்கும் பெரும்பான்மையின மாணவர்கள் தமக்குள் மோதிக்கொண்டமையால் பரமேஸ்வர சந்தியில் பதட்டம் ஏற்பட்டது. அது தொடர்பில் தெரிய வருவதாவது ,

சிரேஸ்ட மாணவர்களுக்கும் கனிஸ்ட மாணவர்களுக்கும் இடையிலையே குறித்த மோதல் சம்பவம் நடைபெற்றது. பெரும்பான்மையின கனிஸ்ட மாணவர் ஒருவரின் தலைமுடியை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதையின் போது கத்தரித்தமையால் ஏற்பட்ட முரண்பாடே மோதலுக்கு காரணம் என அறிய முடிகிறது.

குறித்த மோதல் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் ஆரம்பித்தது எனவும், முன்னதாக பல்கலைகழகம் முன்பாக மாணவர்கள் மோதிக்கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து நகர்ந்து பரமேஸ்வரசந்திக்கு வந்தும் மோதிக்கொண்டு உள்ளனர். அத்துடன் தமக்குள்ள கற்களை வீசியும் மோதியுள்ளனர். இதனால் வீதியால் சென்றவர்கள் பயபீதியுடன் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு இரு காவல்துறையினரே வந்து இருந்ததாகவும் அவர்களால் மாணவர்களை அப்பகுதியில் இருந்து அகற்ற முடியாத நிலை காணப்பட்டதாகவும் அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர்.