விஜய் இடத்தை நோக்கி சிவகார்த்தி!

ஹீரோக்களின் மார்க்கெட்டைவிட டபுள் மடங்கு லாபத்தை எதிர்பார்த்து தோல்வியடைவது, தமிழ் சினிமாவில் உருவாகும் படங்களின் சாபம். அவற்றில் அதிவேகத்தில் வளர்ந்து வந்தாலும் சரியான இடத்தில் கிளட்ச் பிடித்து பிரேக் அடிப்பதும், கியரை மாற்றுவதும் சிவகார்த்திகேயனின் சாமர்த்தியம். ரஜினி முருகன் திரைப்படத்தில் தமிழகத்தின் வசூல் ரூ. 48 கோடி. இது ரெமோ மற்றும் வேலைக்காரன் திரைப்படத்தின் முதல் வாரத்தில் 30 கோடியாக மாறியது. மீண்டும் தனது மைலேஜைக் கூட்டுவதற்கு படத்தைத் தேர்ந்தெடுக்கவும், கேரக்டரை மெருகேற்றவும் வேண்டிய சூழ்நிலை உருவானதால் பொன்ராம் இயக்கத்தில் கமிட் ஆனார் சிவகார்த்தி.

இதுவரை பெயரிடப்படாத பொன்ராம் இயக்கும் படத்தில் சமந்தாவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் சிவகார்த்தி. பொங்கல் விடுமுறை முடிந்ததும் இந்தப் படக்குழு குற்றாலத்துக்கு ஷூட்டிங் செல்கிறார்கள். இது இந்தக்கூட்டணியின் வழக்கமான செயல். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்தப் படத்துக்காக மிகப்பெரிய செட் ஒன்றை உருவாக்கிவருகிறார்கள்.

சென்னை மீனம்பாக்கத்திலுள்ள பின்னி மில்லில் இந்தப் படத்துக்காக மிகப்பெரிய அளவில் அரண்மனை செட் ஒன்று உருவாகிவருகிறது. இந்த செட் உருவாக்குவதற்கு மட்டும் படக்குழு பல கோடிகளை சிதறவிட்டிருக்கின்றனர். மிக முக்கியமான காட்சிகள் இந்த செட்டில் படமாக்கப்படப்போவதாக சொல்லப்பட்டிருப்பதால் கவனமாக உருவாக்கப்பட்டுவருகிறது. பொன்ராம்-சிவகார்த்தி இணையும் திரைப்படத்துக்கு இவ்வளவு செலவில் ஒரு செட் உருவாக்கப்படுவது திரையுலகினருக்கே ஆச்சர்யமான சங்கதி. வேலைக்காரன் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தினாலும், பொதுவாகவே பொன்ராம்-சிவகார்த்தியின் கூட்டணிக்கு இருக்கும் எதிர்பார்ப்புமே இந்தப்படத்துக்கு இவ்வளவு செலவு செய்ய தூண்டியிருப்பதாக பேசப்பட்டாலும், பட்ஜெட்டை குறைப்பதற்காகவே இந்த செலவை செய்துவருகின்றனர். சென்னையிலிருந்து அதிக தூரம் அழைத்துச்சென்று, ஷூட்டிங் நடத்துவதால் ஏற்படும் செலவைக் குறைத்து, சென்னையிலேயே செட் உருவாக்கி இரவு பகலாக விரைந்து ஷூட்டிங்கை முடிப்பதற்காகவே இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

ரஜினி முருகன் திரைப்படத்தின் வசூலை மீண்டும் எட்டிப்பிடிப்பது என்றால், கிட்டத்தட்ட அது விஜய்யின் தமிழக மார்க்கெட்டை தொடுவது. அதாவது ஐம்பது கோடிக்கும் மேலான வசூல். ரெமோ மாதிரியான நகர வாழ்வியலைச் சுற்றிப்பேசும் திரைப்படங்கள் தென் தமிழகத்தில் எடுபடாமல் போனாலும், ரஜினி முருகன் மாதிரியான கிராமத்து சப்ஜெக்ட் மொத்தத் தமிழகத்திலும் ஹிட் அடிக்கும் என்பதால் முடிந்த வரையில் குறைந்த செலவில், நிறைந்த திரைப்படத்தைக் கொடுக்க முயற்சித்து வருகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மற்றும் தெலங்கானா & ஆந்திரப் பிரதேச மாநிலங்களிலும் சிவகார்த்திகேயனுக்கு வளர்ந்துவரும் மவுசு அடுத்த ஐந்து வருடங்களுக்கு அசைக்க முடியாத நாயகனாக அவரை மாற்றுவதுடன், அவருக்கு முன்பு இருக்கும் விஜய்யின் மார்க்கெட்டை நோக்கி நகரவைக்கும்.