கூட்டணியைப் புதுப்பிக்கும் கௌதம்!

கௌதம் மேனன் இயக்கத்தில் 17 ஆண்டுகளுக்கு பின் மாதவன் மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மின்னலே படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் மேனன். முதல் படமே வெற்றிப்படமாக அமைய கௌதம் அடுத்தடுத்து பல படங்களை இயக்கிவருகிறார். ஒன்றாக எண்டர்டெய்ன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல படங்களை தயாரித்தும் வருகிறார். 2001ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தை அதே ஆண்டு ‘ரெக்னா ஹய் டெரெ டில் மெய்ன்’ என்ற தலைப்பில் கௌதம் இந்தியில் ரீமேக் செய்தார். மாதவன் இந்த படம் மூலமே இந்தியில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டணி மீண்டும் அமையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படம், இருவரும் ஒப்பந்தமாகியுள்ள மற்ற படங்களின் பணிகள் முடிவடைந்தவுடன் ஆரம்பமாகும் எனக் கூறப்படுகிறது.

படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “கௌதம் மேனன் தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த நான்கு நட்சத்திரங்களை வைத்து மும்மொழிகளில் இப்படத்தை இயக்கவுள்ளார். மாதவனும் அதில் ஒருவர். இதன் ஆரம்ப கட்டப் பணிகளே நடைபெறுவதால் அதிகாரபூர்வமாக எதுவும் முடிவு செய்யப்படவில்லை” எனக் கூறியுள்ளனர்.

கௌதம் தற்போது விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் பணிகளில் கவனம் செலுத்திவருகிறார். மாதவன் சற்குணம் இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like