ஜல்லிக்கட்டு: பார்வையாளர்கள் மூவர் பலி!

காரைக்குடி அருகே சிராவயல் கிராமத்தில் நேற்று (ஜனவரி 16) நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 2 பார்வையாளர்கள் மாடு முட்டி உயிரிழந்தனர். மணப்பாறை அடுத்த ஆவாரங்காடு அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிராவயல் சிராவயலில் பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. காளைகள் அவிழ்த்துவிடப்பட்டபோது, அவை பார்வையாளர்களை முட்டின. இதில் காரைக்குடி கழனிவாசல் மீனாட்சி நகரைச் சேர்ந்த ராமநாதன் (45) என்பவரும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள தெக்கியூரைச் சேர்ந்த காசி (45) என்பவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களைத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். இந்த மஞ்சுவிரட்டில் மொத்தமாக 50 பேர் காயமடைந்தனர்.

அதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆவாரங்காடு அருகே ஜல்லிக்கட்டில் பார்வையாளர்கள் மீது காளை முட்டியது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் இடையபட்டியைச் சேர்ந்த சோலையப்பன் என்பவர் உயிரிழந்தார். 40 பேர் காயமடைந்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் அன்று மதுரை அவனியாபுரத்திலும்,ஜனவரி 15ஆம் தேதி மாட்டுப் பொங்கலன்று மதுரை பாலமேட்டிலும், ஜனவரி 16 காணும் பொங்கலன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பாலமேட்டில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து (19) என்ற பார்வையாளர் மாடு முட்டி உயிரிழந்தார்.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் இந்த ஆண்டு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like