அரசாங்கத்தின் அதிகாரப் பசியைவிட வறுமைப்பட்ட மக்களின் வயிற்றுப்பசி முக்கியமானது என்பதை அமைச்சர் பந்துல போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கொரோனா மூலம் ஏழு பேர் மாத்திரம் இறந்ததாகவும் டெங்கு மூலம் 500 – 600 பேர் இறந்த போதிலும் தேர்தல் நடைபெற்றது என்ற கருத்தினை அமைச்சர் பந்துல குணவர்த்தன வெளியிட்டிருக்கின்றார். இக்கருத்தினை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
டெங்கு என்பது சர்வதேச ரீதியிலான அல்லது சர்ச்சைக்குரிய நோயாக இருக்கவில்லை. எங்கள் நாட்டில்தான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததது, அதனை கட்டுப்படுத்தக் கூடியவகையில் ஏற்பாடுகளும் ஓரளவு மருந்துகளும் இருந்தன.
கொரோனாவைப் பொறுத்தவரையில் சர்வதேச ரீதியில்கூட கட்டுப்படுத்த மருந்துகள் இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. இதனால் சர்வதேசம்கூட அன்றாட நிகழ்வுகளை ஒத்திவைத்திருக்கின்றது.
இந்த கொரோனா தாக்குதல் உள்ளபோதும் அரசியல் தாக்குதல் என்று சொல்லப்படுகின்ற தேர்தலை நடாத்த வேண்டும் என்று அடம்பிடித்துகொண்டு சிலர் உள்ளனர்.
வைத்தியர்களின் ஆலோசனையும் மக்களின் ஒத்துழைப்பும் எமது மருத்துவர்களின் திறமை அதேபோன்று ஊரடங்குச் சட்டத்தை ஏககாலத்தில் அமுல்படுத்தியமை போன்ற பல காரணங்களால் இந்த கொரோனா தொற்று இலங்கையில் இந்த நிலையில் உள்ளது.
இதனால்தான் இந்த ஏழு பேர் மரணித்தார்கள். இல்லாவிடின் இதன் விளைவுகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மாற்றமடைந்திருக்கும் என்பதை அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தற்போது இந்த கொரோனா தொற்கு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றது. இப்படியான சூழ்நிலையில் தேர்தல் நடைபெறுமானால் மனித இடைவெளியை பேணமுடியாது, கூட்டங்களை கூட்டுகின்ற ஒரு நிலைப்பாடு அதிகரிக்கும். மக்களின் நெருக்கமான நடமாட்டம் அதிகரிக்கும் இதனால் நாம் கொரோனா நோயை வலிந்து பெற்றுக்கொள்கின்றவர்களாக மாற வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும்.
எனவே அரசாங்கத்தின் அதிகாரப் பசியைவிட வறுமைப்பட்ட மக்களின் வயிற்றுப்பசி முக்கியமானது என்பது அமைச்சர் பந்துல போன்றோருக்கு புரியவில்லை.
ஆகையால் கொரோனாவின் கொலைப்பசிக்கு எமது வறுமைப்பட்ட மக்களை உட்படுத்த வேண்டாம் என நான் அரசாங்கத்திடமும், அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.






