மூதறிஞர், சைவசித்தாந்த வித்தகர் ஆ.சபாரத்தினம் அவர்களின் பிரிவுச்செய்தி சைவ மக்களுக்கு மிகுந்த கவலைதரும் செய்தியாகும்.
கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக சைவசித்தாந்தத்தையும், தமிழ் இலக்கண இலக்கியத்தையும் பலருக்குக் கற்பித்த நல்லாசானும் பல வரலாற்று நூல்கள் அச்சேறுவதற்கு அயராது தொண்டாற்றியவருமாகிய மூதறிஞர் ஆ.சபாரத்தினம் ஐயா அவர்களின் பிரிவு குறித்து மிகுந்த கவலையடைகிறேன்.
பண்டிதமணி, அளவை பெ.கைலாசபதி போன்றவர்களின் ஆக்கங்களை அச்சேற்றுவதில் அயராது உழைத்த பெருந்தகை.

பல பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் ஆய்வுபணிகளில் ஈடுபடும் சந்தர்பங்களில், இப்பெருந்தகை அவர்களின் பங்களிப்பை பெறத்தவறவில்லை.
எவர்க்கும் எவ்வேளையும் நடமாடும் நூலகமாக உதவிய பேரறிஞரின் பிரிவு ஈடு செய்ய முடியாதது.
நாரந்தனையில் பிறந்து நீண்டகாலம் கரம்பனில் வாழ்ந்த இவர், கரம்பன் சண்முகானந்த வித்தியாலயத்தில் அதிபராக நீண்டகாலம் பணியாற்றியவர். இவரது சேவையைப் பாராட்டி பல நிறுவனங்கள் இவரைக் கெளரவத்துச் சிறப்பித்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிலும் இவருக்கு சிறப்பான கெளரவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆங்கில இலக்கிய புலமை மிக்க இவரை சுவீடனிலுள்ள உப்சலாப் பல்கலைக்கழகம் 1989 இல் சிறப்பு ஆய்வாளராக அழைத்து இவரது ஆற்றலைப் பெருமைப்படுத்தினார்கள்.
மிகச்சிறந்த புலமையாளராகிய இப்பெரியாரின் பணிகள் என்றும் மறக்க முடியாதவை.
கலாநிதி.ஆறு.திருமுருகன்.
தலைவர்
ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்
தெல்லிப்பழை.






