மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – கொம்மாதுறை பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்பிற்குச் சென்று திரும்பிய மாணவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இவரை மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொம்மாதுறை – பாரதி வீதியைச்சேர்ந்த 15 வயதுடைய கந்தலிங்கம் ரேஸ்னியா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இது பற்றி அவரது குடும்ப உறவினர்கள் தெரிவிப்பதாவது நேற்று மாலை 5 மணியளவில் பிரத்தியேக வகுப்பிற்குச் சென்ற இவர், 10 நிமிடத்தில் வீடு திரும்பியுள்ளார். அவ்வேளை அவரது தாய் காரணத்தை வினவியபோது ‘ஆசிரியர் வராததனால் பாடம் நடைபெறவில்லை” என பதில் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து ‘பொய் சொல்லக்கூடாது” என தாய் எச்சரித்துள்ளார். அதிலிருந்து சற்றுநேரத்தில் அந்த மாணவி வீட்டிற்குள் சென்று கதவினை அடைத்துக்கொண்டார்.

உடைகளை மாற்றிக்கொள்வதற்காகவே கதவு மூடப்பட்டுள்ளதாக பெற்றோர் நினைத்துக்கொண்டனர்.

பின்னர் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பிரத்தியேக வகுப்பிற்குச் செல்வதற்காக கதவுகளைத் தட்டியபோது கதவு திறக்கப்படவில்லை.

இதையடுத்து, கதவின் துவாரம் வழியாக உற்றுப் பார்த்தபோது கால்கள் தொங்குவதை அவதானித்து அயலவரின் ஒத்துழைப்புடன் கூரை வழியாக உள்ளே இறங்கிப் பார்த்தபோது அவர் குற்று உயிராக தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அவரின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த சேலைத்துண்டுகளை அவிழ்த்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம். நஸிர் சம்பவ வீட்டிற்கு நேரடியாகச் சென்ற விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் டாக்டர் கே.சுகுமார் பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் பிரேதம் குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏறாவூர்ப் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like