அட, விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜனவரி 16) வெளியாகியுள்ள சீதக்காதி படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மீண்டும் விஜய் சேதுபதியைக் கதாநாயகனாக கொண்டு இயக்கிவரும் படம் சீதக்காதி. இந்தப் படத்தின் போஸ்டரில் உள்ள விஜய் சேதுபதியின் தோற்றம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. வயதான தோற்றத்தில் விஜய் சேதுபதி புத்தகத்துடன் உட்கார்ந்துள்ள அந்தப் புகைப்படம் எழுத்தாளர் கி.ராஜநாராயணனை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

ஆஸ்கர் விருதுபெற்ற ஒப்பனைக் கலைஞர் கெவின் கேனி மற்றும் அலெக்ஸ் நோபில் இந்த படத்தில் பணியாற்றுகின்றனர். இது குறித்து பாலாஜி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “கடந்த மாதம் நானும் விஜய் சேதுபதியும் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று ஒப்பனைக் கலைஞர்களை சந்தித்து விக்குக்கு மோல்டு எடுத்தோம். தற்போது விஜய் சேதுபதியின் காட்சிகளை மட்டும் படமாக்கிவருகிறோம். நான்கு மணி நேரம் மேக்கப் போடுவதற்கும் ஒரு மணி நேரம் கலைப்பதற்கும் செலவாகிறது. கடினமான பணி என்றாலும் சிறப்பாக வந்துள்ளது” என்று கூறினார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருதுபெற்ற நடிகை அர்ச்சனா நடிப்பதாக பாலாஜி தெரிவித்துள்ளார். “விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் சீதக்காதி அல்ல. ஆனால் படத்தை பார்க்கும் போது தலைப்பின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியும்” என்றும் பாலாஜி பகிர்ந்துகொண்டுள்ளார்.

ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கின்றனர். இயக்குநர் மகேந்திரன், மௌலி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் நடித்திருந்த பகவதி பெருமாள், ராஜ்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like