கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் பலி !

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (05) மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்ததுடன் அதே குடும்பத்தை சேர்ந்த சிறுவன் பலியாகியுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பிலிருந்து குறித்த குடும்பத்தினர் மோட்டார் சைக்கிளில் மரப்பாலத்திற்கு சென்றுகொண்டிருக்கும் போது 12.30 மணியளவில் கரடியனாறு அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.

மேலும் படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியில் ரோபெட் கெனான் என்கிற 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த சிறுவனின் தந்தை ரொபட், தாய் மதிவதனி, மற்றும் தங்கை 2 வயது ஜெய் எலெனா ஆகியோர் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.