கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம்

இலங்கையின் அரசியலமைப்பின் படி இலங்கைக் குடியுரிமை கொண்டவர்கள் மாத்திரமே, தேர்தலில் போட்டியிட்டு, தெரிவு செய்யப்பட முடியும் என்றும், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் உள்ளது.

அதனால் 2019ஆம் ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதற்கு வசதியாக அவர் தனது அமெரிக்கக் குடியுரிமையை கடந்த ஆண்டு முற்பகுதியில் துறப்பதாக விண்ணப்பித்திருந்தார்.

எனினும் கடந்த ஆண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் அமெரிக்கக் குடியுரிமையிலிருந்து நீங்கியோர் பட்டியல்களில் கோத்தாபய ராஜபக்சவின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த நிலையில் இரட்டைக் குடியுரிமை உள்ள ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என சவாலுக்குட்படுத்தி கோத்தாபய ராஜபக்சவின் வேட்பாளர் நியமன அறிவிப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.