தண்டவாளத்தில் சிதறி கிடக்கும் சப்பாத்தி… நொடிப்பொழுதில் 17 பேர் பலியான சோகம்! அடுத்தடுத்து நிகழும் துயரம்

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் இன்று ரயில் விபத்தில் 17 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியானார்கள். அந்த விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது.

உலகம் முழுக்க அடுத்தடுத்து அசம்பாவிதம் நடந்து வருகிறது. கொரோனாவிற்கு இடையே நேற்று ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினத்தில் எல்ஜி பாலிமர் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து 14 பேர் பலியானார்கள்.

குறித்த சம்பவத்தின் பேச்சு அடங்கும் முன்பு தற்போது நிகழ்ந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக இந்தியாவில் பலியாகியுள்ளனர்.

ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர் கூலித்தொழிலாளிகள் தண்டவாளத்தில் படித்திருக்கும் போது, சரக்கு ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவில் ஜல்னா பகுதியில் இரும்பு தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் தங்களது சொந்த ஊரான மத்திய பிரதேசத்திற்கு செல்வதற்கு முயற்சி செய்துள்ளனர்.

ஜல்னாவில் இருந்து புவாசல் பகுதிக்கு ரயில் ஏறுவதற்காக இவர்கள் நடந்து சென்ற இவர்கள், 38 கி.மீற்றர் பொலிசாருக்கு பயந்து சாலைவழியே செல்லாமல், தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர்.

வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்ட இவர்களுக்கு, நடந்து நடந்து களைத்து போனதால் அதிகாலையில் தண்டவாளம் ஒன்றில் படுத்துள்ளனர். சுற்றி முட்புதர் காணப்பட்டதால், ரயில் எதுவும் வராது என்று நினைத்து தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துள்ளனர்.

கர்மாட் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் நேரம் சரக்கு ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வந்து, வேகமாக அவர்கள் மீது ஏறி சென்றுள்ளது. இதில் சம்பவ இடத்தில் 17 பேர் பாலியான நிலையில், இரண்டு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது.

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது. அந்த பணியாளர்கள் தங்களின் காலை உணவுக்காக வைத்து இருந்த சுட்ட சப்பாத்தியின் புகைப்படங்கள் ஆகும். காய்ந்து போன நிலையில் சப்பாத்திக்கள் தண்டவாளத்திற்கு வெளியே சிதறி கிடந்தது. இந்த புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

திடீர் லாக்டவுன் காரணமாக வெவ்வேறு இடங்களில் சிக்கிக் கொண்ட இவர்கள் இப்போதுதான் தங்கள் சொந்த ஊருக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

இரண்டு மாதம் வருமானம் இன்றி, உணவு இன்றி கஷ்டப்பட்ட இவர்கள் உறவினர்களை சந்திக்கும் சந்தோஷத்தில் சென்றனர். ஆனால் வீட்டிற்கு செல்லும் முன், பரிதாபமாக விபத்தில் சிக்கி பலியாகி உள்ளது வேதனையை அளித்துள்ளது.