நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்ச நிலைமைக்கு மத்தியில் செயலாற்றி வரும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடர்கால கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் இந்த விசேட கொடுப்பனவு வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிராம சேவகருக்கு ஒரு பிரிவிற்கு 450 ரூபா கொடுப்பனவும் அதற்கு மேலதிகமான பிரிவிலும் அவர் கடமையாற்றுவதாக இருப்பின் 150 ரூபா மேலதிக கொடுப்பனவையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசிக்கான கொடுப்பனவாக 1000 ரூபா வழங்கப்படவுள்ளது. இந்தக் கொடுப்பனவுகள் இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு பாரிய உதவியாக அமையும்.
இந்த இடர்காலக் கொடுப்பனவுகள் மூன்று மாதத்திற்கு வழங்கப்படவுள்ளன. எதிர்கால நிலைமையைக் கருதி இது நீடிக்கப்படும் சாத்தியமும் காணப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்கு எதிராக கடுமையாக உழைக்கும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் கொடுப்பனவொன்றை வழங்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் கோரிக்கைக் கடிதமொன்றை கையளித்திருந்தார்.
இதனடிப்படையில் பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






