12 மணிநேரம் கணவரின் சடலத்துடன் அழுது கொண்டிருந்த மனைவி! நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்

சாலை ஓரம் வசித்து வந்த முதியவர் ஒருவர், உடல் நலக்கோளாரால் இறந்த நிலையில் அவரது பார்வையற்ற மனைவி 12மணி நேரம் உடலுடன் இருந்தது சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

தங்கப்பன் – ஜெயந்தி தம்பதியினர், சென்னை மயிலாப்பூர் ரோசாரி சர்ச் சாலை ஓரேமாக வசித்து வந்துள்ளனர்.

இதில், தங்கப்பனுக்கு நடக்க இயலாது, ஜெயந்திக்கு பார்வை தெரியாது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக அந்த சாலையில் வசித்து வந்த அவர்களுக்கு அக்கம்பக்கத்தினர் உதவி செய்து தங்கள் நாட்களை கடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், ஊரடங்கு அமலுக்கு வந்தது. எனவே அவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு வழங்கி வந்துள்ளனர்.

நேற்றைய தினம், முதியவர் தங்கப்பனின் உடல் நிலை மோசமாகியுள்ளது. அவரை அக்கப்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் ஜெயந்தி சேர்த்துள்ளார். ஆனால், மருத்துவர்கள் கொரோனா தாக்கம் அதிகம் இருப்பதால் தங்கப்பனுக்கு மருத்துவம் பார்க்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

என்ன சென்வது என்று தெரியாத ஜெயந்தி, தனது கணவனை ஒரு தள்ளுவண்டியில் வைத்து கவனித்துள்ளார். இந்நிலையில், தங்கப்பன் வெகுநேரமாக பேச்சு மூச்சு இல்லமல் கிடப்பதை உணர்ந்த ஜெயந்தி, அவர் இறந்துவிட்டதை உணர்ந்து அழுதுள்ளார்.

இதை பார்த்த பொதுமக்கள் காவல்துறை, மற்றும் மாநகராட்சி ஆகியோருக்கு தெரிவித்துள்ளனர். ஆனால், கிட்டத்தட்ட 12 மணி நேரம் உடலை எடுக்க யாரும் வரவில்லை.

ஜெயந்தி, என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுகொண்டே உடல் அருகில் இருந்துள்ளார்.

தன்னார்வலர்கள் சிலர் கொடுத்த அழுத்ததின் பேரில் பொலிசார், உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு, கொரோனா சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின் அந்த பார்வையற்ற மூதாட்டியை, ஆதரவற்றோர் முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது வருத்ததை தருவதாக, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.