அச்சுவேலி பொலிஸ் பிரிவில் சட்டத்துக்குப் புறம்பான மதுபான விற்பனை அதிகரிப்பு; மற்றொருவரும் கைது

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனைகள் இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தூர் கிழக்கில் உள்ள வீடொன்றின் வளவுக்குள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 180 மில்லி லீற்றர் அளவுடைய 100 மதுபானப் போத்தல்கள் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை மறைத்துவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் வீட்டில் வசிப்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவின் கீழான சிறப்பு பொலிஸ் பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

நேற்று முற்பகல் வீட்டு வளவுக்குள் மண்ணுக்கு புதைத்து வைத்து சட்டத்துக்குப் புறம்பாக அரச சாராயத்தை விற்பனை செய்தார் என்றார் குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 180 மில்லி லீற்றர் எடையுடைய 200 மதுபானப் போத்தல்களும் மென் மதுபானம் 48 தகரங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில் அந்த வீட்டுக்கு சில மைல்கள் தூரத்தில் இன்று அதிகாலை மற்றொரு வீட்டின் வளாகத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 180 மில்லி லீற்றர் அளவுடைய 100 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டில் வசிப்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனைகள் இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவால் சிறப்பு பொலிஸ் பிரிவு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பிரிவு தொடர் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.