அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவில் மோசடி செய்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
இக்கிராம உத்தியோகத்தரின் மோசடி தொடர்பில் ஆராய மூவர் கொண்ட குழு மாவட்ட அரசாங்க அதிபரால் நியமிக்கப்பட்டது.
இதில் ஆரம்ப விசாரணை அறிக்கைக்கேற்ப குறித்த உத்தியோகத்தரின் சேவையை மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்தியுள்ளார்.
மேலும் குறித்த நபர் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடைமுறையின் போது அறவிடுகின்ற 30,000ரூபாவை பிரதேச செயலகத்திற்கு வழங்காமல் மோசடி செய்தமை தொடர்பில் இவ்விசாரணையில் வெளிவந்ததாகவும் இது தொடர்பிலான பூரண அறிக்கை தமக்கு கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.






