அம்பன் சூறாவளி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்! இலங்கையின் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

“AMPHAN” என்ற மீயுயர் பாரிய சூறாவளியானது இன்று (2020 மே 19ஆம் திகதி) முற்பகல் 08.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 1020 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 16.00 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.80 E இற்கும் இடையில் மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கும் மேலாக மையம் கொண்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று நண்பகல் 12 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள காலநிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

அம்பன் சூறாவளியானது வடக்கு – வடமேற்கு திசையில் இலங்கையை விட்டு விலகி நகர்ந்து மே 20ஆம் திகதி பிற்பகலளவில் மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை காணப்படும். புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like