ஜூன் 20இல் பொதுத் தேர்தலை நடத்தச் சாத்தியமில்லை – உயர் நீதிமன்றுக்கு அறிவித்தது தேர்தல் ஆணைக்குழு

நாடு தற்போதுள்ள நிலைமையில் திட்டமிட்டபடி ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சத்தியங்கள் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த திகதி குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்குட்படுத்தும் அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றால் இன்று மூன்றாவது நாளாக பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன.

பிரதம நீதியரசர் தலைமையிலான 5 நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த மனுக்களை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுத்தன.

இன்று தேர்தல்கள் ஆணைக்குழு தனது நிலைப்பாட்டை உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சுகாதாரத் துறையினர் கோரோனா வைரஸ் நீங்கியதாக அறிவித்த பின்னர் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை முன்னெடுக்க 9 தொடக்கம் 11 வாரங்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்குத் தேவைப்படும்.

ஊரடங்குச் சட்டம் மற்றும் சுகாதாரக் கட்டுப்பாடுகளால் மனிதவள வேலை நேரமும் குறைவடைகின்றது.

எனவேதான் அரசியலமைப்புச் சம்பந்தப்பட்ட இந்த விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றின் ஆலோசனையைப் பெறுமாறு ஜனாதிபதியின் செயலாளரிடம் தேர்தல் ஆணைக்குழு கேட்டிருந்தது. எனினும் உயர் நீதிமன்றின் ஆலோசனையைப் பெற ஜனாதிபதி விரும்பவில்லை என்று ஜனாதிபதியின் செயலாளரால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பதிலளிக்கப்பட்டது.

அரசால் அறிவிக்கப்பட்டபடி ஏப்ரல் 27ஆம் திகதிக்குள் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த திகதி நிர்ணயிக்கப்பட்டது. இன்று அது மே 20 ஆம் திகதியைத் தாண்டியும் நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படவில்லை.

23 மாவட்டங்களில் இன்னும் இரவு ஊரடங்கு உத்தரவு உள்ளது. இரண்டு மாவட்டங்களில் முழுநாள் ஊரடங்கு உத்தரவு இன்னும் நடைமுறையில் உள்ளது. பொதுவாக தேர்தல் தயாரிப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் 16-18 மணி நேரம் கடமையில் இருப்பார்கள், இப்போது 10 அல்லது 12 க்கு மேல் செய்ய முடியாது” என்று தேர்தல் ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலியா பீரிஸ் சமர்ப்பணம் செய்தார்.

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, மார்ச் 17ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதிவரை பொது விடுமுறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் அன்றைய தினங்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் செல்லுபடியற்றவை” என்று சமர்ப்பணம் செய்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like