ஊழியர்களின் எதிர்ப்பால் தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்

கொரோனா வைரஸ் நோயில் இருந்து தற்காத்து கொள்வதற்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய தனது மகளுடன் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் நேற்றும் நேற்று முன்தினமும் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலின் புதல்வி, ஹொட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் அனுமதி அடிப்படையில் நேற்று முன்தினம் ஹொட்டலில் இருந்து வெளியேறினார்.

தனது புதல்வியை செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பேராசிரியர் ஹூல், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்.

இது குறித்த தகவலை அறிந்துக்கொண்டதும் தேர்தல் ஆணைக்குழுவின் ஊழியர்கள் நேற்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து சிரேஷ்ட அதிகாரிகள் தலையிட்டு அவர்களை தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தனிமைபபடுத்தல் சட்டத்தை மீறி பேராசிரியர் ஹூல் தனது புதல்வியை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைத்து வந்ததன் மூலம் தினமும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வரும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை ஆபத்துக்கு உள்ளாகி இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் மற்றும் அவரது புதல்வி ஆகியோர் தேர்தல் ஆணைக்குழுவின் ஊழியர்களின் எதிர்ப்பை அடுத்து நேற்று மதியம் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியதாகவும் இதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழு அலுவலகம் முற்றாக கிருமி தொற்று நீக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் இன்று நடைபெறும் தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் பேராசிரியரை வீடியோ தொழிற்நுட்பத்தின் மூலம் கலந்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.