பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் திறப்பது குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்தா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சித்ரானந்தா, சுகாதார அதிகாரிகளின் சுகாதார ஆலோசனையின் அடிப்படையில் ஜனாதிபதியால் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதியின் அறிவித்தலின்படி நாடாளவிய ரீதியில் ஊடரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதைப் போன்று பாடசாலைகளை திறப்பது தொடர்பான முடிவுகளை எட்டுவதற்கு முன்னர் அனைத்து பரிந்துரைகளும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பரீட்சைகளை ஒத்தி வைப்பது தொடர்பான தீர்மானங்கள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் பரீட்சை தாள்களை தொகுப்பதற்கு முன்னர் மாணவர்களின் நிலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அதன் பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் நியாயமான முறையில் சாதாரண மற்றும் உயர் நிலை பரீட்சைகளை நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்தா தெரிவித்தார்.