கழிவுப் பொருட்களைக் கொண்டு கார் தயாரித்த கிளிநொச்சி இளைஞன் ! குவியும் பாராட்டு

கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் கழிவுப் பொருட்களைக் கொண்டு 20 வயதான அருள்தாஸ் ரொஷான் கார் ஒன்றைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி, தனது திறமை, நீண்ட கால முயற்சி, சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முழு மூச்சாக உழைத்து இன்று கழிவு பொருட்களைக்கொண்டு மோட்டார் வாகனம் ஒன்றினை வடிவமைத்துள்ளார்.

இளைஞனின் இந்த வடிவமைப்புக்கு குடும்ப பொருளாதாரம் பாரிய தடையாக இருந்துள்ளது எனினும், நீண்ட கால முயற்சியின் வெளிப்பாடாக அவர் இந்த மோட்டார் வாகனதை உருவாக்கியுள்ளார்.

பழுதடைந்த மோட்டார் சைக்கிள் எஞ்சினை திருத்தி அதனை குறித்த வாகனத்திற்கு பயன்படுத்தியதுடன், கழிவாக வீசப்பட்டிருந்த வாகன பொருட்களையும் பயன்படுத்தியே மோட்டார் வாகனத்தை அவர் வடிவமைத்துள்ளார்.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்ற அருள்தாஸ் றொசான் , சிறுவயதிலிருந்தே இவ்வாறான வடிவமைப்பு தொடர்பில் ஆர்வம் செலுத்தி வந்துள்ளதாக அவரது தாயார் தெரிவிக்கின்றார்.

குடும்ப பொருளாதாரம் பின்னிலையில் இருந்தபோதிலும், மகனின் முயற்சியை தட்டிக்கொடுத்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார். அதன் விளைவாக கிடைத்த இந்த வெற்றி தனக்கு மகிழ்வினை தருவதாக தெரிவிக்கும் தாயார், தான் பெருமை அடைவதாகவும் குறிப்பிடுகின்றார்.

உயர்தரக் கல்வியை நிறைவு செய்ய குறித்த இளைஞன் தொழில் பயிற்சி நிறுவனத்தில் கல்வி கற்று வருகின்றார்.

குறித்த வடிவமைப்பின்போது பொருளாதாரம் சார்ந்த பல தடைகள் தனக்கு ஏற்பட்டதாகவும், வைத்தியசாலையில் நோயாளர்களை பரமரிப்பதன் ஊடாக கிடைக்கும் வருமானத்திலிருந்து குடும்ப செலவையும் பார்த்து எனக்கு சிறு, சிறு தொகையை தாயார் வழங்கியதன் ஊடாகவே இன்று இவ்வாறான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும், அந்த இளைஞன் தெரிவிக்கின்றார்.

அத்துடன் இவ்வாறான வடிவமைப்பு எமது நாட்டுக்கு ஏற்ற வகையில் உள்ளதாகவும், இதனை மாதிரியாக வைத்து வேறு வாகனங்களையும் வடிவமைக்க முடியும் எனவும், அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

மிகக் குறைந்த செலவில் முச்சக்கர வண்டிக்கும் குறைவான தொகையில், இவ்வாறான வடிவமைப்பை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

தனது நண்பர்கள் பலரை ஏற்றியவாறு பயணித்தபோது 60 கிலோ மீட்டர் வேகத்தில் குறித்த வாகனம் பயணிப்பதாகவும் தெரிவிக்கும் இளைஞன், 500 கிலோ எடைவரை வாகனத்தில் ஏற்ற முடியும் எனவும் தெரிவிக்கின்றார்.

குறித்த வடிவமைப்பு 75வீதம் பூரணமடைந்துள்ளதாகவும், வயரிங் உள்ளிட்ட சில வேலைகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதனைப் போன்று வடிவமைப்புக்களை தன்னால் மேற்கொள்ள முடியும் எனவும், அதற்கு உற்பத்தி நிறுவனங்கள் உதவினால், குறைந்த செலவில் இவ்வாறான உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும், குறித்த இளைஞன் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

குறித்த இளைஞனின் இந்த முயற்சி தொடர்பில், கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன், நேரில் சென்று பாராட்டியுள்ளார் .