கர்ப்பிணித் தாய்மார்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!

மன்னார், மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் கர்ப்பிணித் தாய்மார்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று திங்கட்கிழமை காலை மாதாந்த பரிசோதனைக்குச் சென்ற கர்ப்பிணித்தாய்மார்கள் அங்கு மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் மீண்டும் ஒரு தினத்திற்கு வருமாறு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனால், தாம் தொடர்ச்சியாக திருப்பி அனுப்பப்படுவதினைக் கண்டித்து நூற்றுக்கணக்கான கர்ப்பிணித்தாய்மார்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் வீதியை மறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் பாதிப்படைந்திருந்தது.
இது தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் கருத்துத் தெரிவிக்கையில், ‘இது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு முழு காரணமும் நிர்வாகத்தில் உள்ள சீரின்மையே.

எனவே வெகு விரைவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தில் அதிகளவான மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளேன்’ என அவர் தெரிவித்தார்.