எதிர்வரும் நாட்களில் இலங்கையில் நடைபெறவுள்ள திருமணங்கள் எப்படி நடக்கவேண்டும்? சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் விருந்துகளின் போது விருந்தினர்களின் எண்ணிக்கை 25 ஆக மட்டுப்படுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமகாலத்தில் திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் கூட்டங்களும் தவிர்க்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பணியிடங்களுக்கான செயற்பாட்டு வழிகாட்டுதல்களை பட்டியலிடும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.

நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் முகமூடி அணிந்து ஒரு மீட்டர் தூர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியதுடன், கட்டிப்பிடிப்பதும் கைகுலுக்குவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்வு மண்டபங்களுக்குள் நுழையும் அனைத்து விருந்தினர்களின் உடல் வெப்ப நிலையையும் சரிபார்க்க வேண்டும் எனவும் மண்டபத்தில் காற்றோட்டம் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுகளுக்கு வரும் விருந்தினர்கள் பாத்திரங்களை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அங்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.