பிரத்தியேக வகுப்பு நடத்திய ஆசிரியர்கள் இருவர், 14 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலில்

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது பிரேத்தியேக வகுப்புகளை இரகசியமாக நடாத்தி வந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அவர்களது வகுப்புக்களில் பங்கேற்ற 14 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று தலவாகலை லிந்துளையில் இடம்பெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா தொற்று வைரஸ் பரவல் காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த மார்ச் 13ஆம் திகதி தொடக்கம் அரசால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

தலவாகலை லிந்துளை நகரசபைக்குட்பட்ட தலவாகலை பகுதியில் இரண்டு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிகாது உயர்தர மாணவர்கள் 14 பேருக்கு தகவல் தொழில்நுட்ப பிரேத்தியேக வகுப்பை நடாத்தி வந்தமை தொடர்பில் தலவாகலை லிந்துளை நகரசபை தலைவருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்களையும் தலவாகலை லிந்துளை நகர சபைக்கு அழைத்து விசாரனைகளை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் தலவாகலை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் தலவாகலை பொலிஸார் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டது.

தொடர்ந்து குறித்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்களும் அவர்களுடைய வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தபடுத்தப்பட்டனர்.