5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு

கொவிட் 19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவானது, அரசியலை நோக்கமாக கொண்டு வழங்கப்படுவதாக பல முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள பிரதேச மற்றும் கிராம அரசியல்வாதிகள் அனைவரையும் விலகிக்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயலாளர்களுக்கு கடிதம் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஜுன் மாதத்திற்கான கொரோனா நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட மாட்டாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவத்துள்ளார்.

கல்கிஸையில் உள்ள விகாரை ஒன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபாவை அடுத்த மாதத்திற்கு வழங்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதோடு, அரசாங்கத்திற்கும் நிதி ரீதியான பிரச்சினைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, எதிர்வரும் ஜுன் மாதத்திற்கான 5 ஆயிரம் ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட மாட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.