யாழில் பெண் சட்டத்தரணியை அசிங்கப்படுத்திய இராணுவத்தினர்

யாழ்ப்பாணத்தில் பெண் சட்டத்தரணி ஒருவருடன் இராணுவத்தினர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ள சம்பவெமான்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

யாழ்.நகரை அண்மித்த பகுதியில் குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனிஸ்ட பெண் சட்டத்தரணி தனது சிரேஸ்ட சட்டத்தரணியின் அலுவலகத்தில் கடமைகளை முடித்துக்கொண்டு இரவு 7 மணியளவில் வீடு திரும்பிய போது வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் குறித்த பெண் சட்டத்தரணியை மறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது தான் சட்டத்தரணி என , தனது அடையாள அட்டையை அவர் இராணுவத்தினரிடம் காண்பித்துள்ளார். அவ்வேளை அவருடைய கைப்பையை தாம் சோதிக்க வேண்டும் என கோரிய இராணுவத்தினர் கைப்பையினுள் இருந்த பொருட்களை வீதிகளில் கொட்டி , கைப்பையை சோதனையிட்ட பின்னர் வீதியில் கொட்டப்பட்ட பொருட்களை பொறுக்கி எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர். அதற்கு சம்மதிக்காத சட்டத்தரணி , பொருட்களை வீதியில் கைவிட்டு விட்டு தனது கைப்பையை இராணுவத்தினரிடமிருந்து வாங்கி சென்றுள்ளனர்.

இராணுவத்தினரின் இந்த அநாகரிக செயற்பாடு குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சிரேஸ்ட சட்டத்தரணிகள் ஆலோசித்து வருவதாக அறிய முடிகிறது.

யாழில். கடந்த இரு தினங்களாக மாலை வேளைகளில் பல இடங்களில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதி சோதனை நடவடிக்கைகளும் பதிவுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.