யாழ். இந்துக் கல்லூரி புதிய அதிபர் நியமனத்தில் முறைகேடு!

யாழ். இந்துக் கல்லூரியில் தற்போது புதிதாக வழங்கப்பட்டுள்ள அதிபர் நியமனம் முறைகேடானதாகும் எனச் சுட்டிக் காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் இத்தகைய தகுதியற்ற நியமனங்களை வழங்க மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீட்டையும் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது பதில் அதிபராக நியமிக்கப்பட்டவருக்குப் பல தடவைகள் இடமாற்றங்கள் வந்த போதிலும் கல்வியமைச்சின் உத்தரவை முறையாகப் பின்பற்றாமல் அரசியல் தலையீடுகள் மூலம் தொடர்ந்தும் யாழ். இந்துக் கல்லூரியிலேயே பணியாற்றியிருந்தார்.

யாழ்.இந்துக் கல்லூரியின் அதிபர் ஓய்வு பெற்றதன் பின்னர் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர் இடமாற்ற விதிமுறைகளுக்கு அமைய நியமிக்கப்படவில்லை.

இவர் தான் நீண்ட காலம் இப் பாடசாலையில் சேவையாற்றிய ஒருவர் எனக் காரணம் காட்டியுள்ள போதிலும் 2016 சுற்றுநிருப இலக்கம் 18/2015 நிபந்தனைகளுக்கு அமைய 05.01.2016. முதல் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். ஆயினும், இவர் தனது கடமையை அங்கு பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.

பின்னர் 2017 வருடாந்த இடமாற்றச் சுற்றறிக்கைக்கு அமைய 01.06 2017 முதல் யாழ்.திருக்குடும்பக் கன்னியர் மடம் பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆயினும் அங்கும் இவர் தனது கடமையைப் பொறுப்பேற்கவில்லை.

இவ்வாறு கல்வியமைச்சால் வழங்கப்பட்ட இரண்டு இடமாற்றத்தையும் முறையாகப் பின்பற்றாமல் ஒரே பாடசாலையில் கற்பித்ததன் மூலமே சிரேஷ்ட உத்தியோகத்தர் என்று போலியான காரணம் காட்டி முறைகேடான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பாடசாலையில் அதிபர் ஓய்வுபெறும்போது 1998/23 சுற்றறிக்கையின் அடிப்படையில் வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டும். ஆனால், இதற்கு மாறாக அரசியல்வாதிகளுக்குச் சேவகம் செய்பவர்களுக்குப் பாடசாலை அதிபர்களாக நியமனம் வழங்குவதைக் கல்வியமைச்சு உடன் நிறுத்த வேண்டும்.

இவ்வாறான அதிபர்கள் தமக்கு நியமனங்களைப் பெற்றுத் தந்த அரசியல்வாதிகளுக்கு விசுவாசமாக நடந்துகொண்டு முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, யாழ்.இந்துக் கல்லூரியின் அதிபர் நியமனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியல் தலையீடு நீக்கப்பட்டு1998/23 சுற்றறிக்கையின் அடிப்படையில் பொருத்தமானவர்களுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like