மே மாதம் 5,000 ரூபாய் கொடுப்பனவு யாழ்ப்பாணத்தில் அனைவருக்குக் கிடைக்கும்.

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவிக்கொடுப்பனவைப் பெற்ற அனைவருக்கும் மே மாதமும் அந்தக் கொடுப்பனவு வழங்கப்படும். பொதுமக்கள் இது தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை” என்று மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் க.மகேஸ்வரன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

கோரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அரசினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் இடர் உதவிக் கொடுப்பனவு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 113 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக மே மாதத்துக்கும் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை கட்டாயமாக வழங்கப்படும்.

இவ் உதவித்தொகையை 76 ஆயிரத்து 32 சமுர்த்தி பயனாளிகளும் 11 ஆயிரம் சமுர்த்தி உதவி பெற காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களும் 39 ஆயிரத்து 473 தொழிலை இழந்தவர்களும் மற்றும் 8 ஆயிரத்து 608 மேன்முறையீடுகள் மூலம் இணைக்கப்பட்டோரும் உள்ளடங்குகின்றனர்.

மேலும் முதற்கட்டமாக உதவித்தொகை பெற்ற அனைவருக்கும் இரண்டாம் கட்ட உதவித் தொகை கடந்த 18ஆம் திகதி தொடக்கம் வழங்கப்பட்டு வருகின்றது

இரண்டாம் கட்ட 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கட்டாயம் வழங்கப்படும். எனவே இது தொடர்பில் பொது மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. அரசினால் விடுவிக்கப்படும் நிதி வழங்கலில் உள்ள தாமதத்தின் காரணமாக மக்களிற்கு குறித்த உதவித்தொகையினை வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது. எனினும் அது கிராமமாக அனைவருக்கும் வழங்கப்படும்.

தங்களுடைய பிரதேச சமுத்தி உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பொது மக்கள் இரண்டாம் கட்ட கொடுப்பனவை பெற்றுகொள்ளமுடியும் – என்றார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like