இன்று முதல் கையில் செல்பேசி இருந்தால் வாகனச்சாரதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படும்!

வாகனம் செலுத்தும்போது, நீங்கள் ஏதாவது ஒரு வீதி விதி மீறல் செய்யும் போது, உங்கள் கையில் செல்பேசியிருந்தால், உடனடியாக உங்களது வாகனச்சாரதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படும் என இன்று முதல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரணமாக, சமிக்ஞை விளக்கைப் போட மறந்தால் (défaut de clignotant), வீதியிலுள்ள தொடர் கோட்டைக் கடந்தால் (franchissement d’une ligne continue), அல்லது வேக்கட்டுப்பாட்டை மீறினால், பாதசாரிக்கு வழிவிட மறுத்தல், அல்லது மிகவும் ஆபத்தாக ஒரு வாகனத்தை முந்துதல் (dépassement dangereux) போன்ற குற்றங்களின் போது, உங்கள் கையில் செல்பேசி இருந்தால், உங்களது வாகனச் சாரதிப்பத்திரம் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்.

அந்தக் கணத்திலிருந்து நீங்கள் உங்கள் வாகனத்தைச் செலுத்த முடியாது. வேறு யாரையும் அழைத்தே வாகனத்தைக் கொண்டு செல்ல முடியும்.

முதற்கட்டமாக 72 மணித்தியாலங்களிற்குத் தடை செய்யப்படும் வாகனச்சாரதிப்பத்திரம், மாவட்ட உயர் நிர்வாக அதிகாரியான préfet யினால் 6 மாதங்கள் வரை, இரத்துச் செய்யப்படும்.

செல்பேசியினால் நடக்கும் விபத்துக்களில் மரணங்களும் படுகாயங்களும் மிகவும் அதிகமானவையாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீதிவிபத்துக்களில் பெரும்பாலானவை, வேககட்டுப்பாட்டு மீறலாலும், செல்பேசியாலுமே நிகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.