கேரளாவில் பயங்கரம்…மனைவியை திட்டமிட்டு விஷப் பாம்பை கடிக்க வைத்த கணவன்! உண்மையை ஒப்புக் கொண்டார்

கேரளாவில் பாம்பால் கடிபட்டு உயிரிழந்த இளம் பெண் சம்பவத்தில் கணவன் உண்மையை ஒப்புக் கொண்டதால், அவர் மற்றும் கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க உத்ரா என்பவரின் மரணம் தொடர்பில் அவரது கணவர் மீது சந்தேகம் வலுத்ததால், பொலிசார் நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில் உத்ராவின் கணவர் சூரஜ் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த 7-ஆம் திகதி கொல்லத்தின் அனச்சலில் இருக்கும் இல்லத்தில் உத்ரா என்பவர் பாம்பு கடியால் பரிதாபமாக இறந்தார்.

ஏற்கனவே, இதற்கு முன்பு பாம்பு கடியில் இருந்து உயிர் தப்பிய இவரை மீண்டும் பாம்பு கடித்ததால் இது குறித்து பெண்ணின் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில், சூரஜ் அறிமுகமான நபர் ஒருவரிடமிருந்து விஷப் பாம்பு ஒன்றை வாங்கி உத்தராவை கடிக்க வைத்துள்ளார்.

இதற்காக சில பாம்பு பிடிப்பவர்களிடமிருந்து இரண்டு பாம்புகளை சுமார் 10,000 ரூபாய்க்கு வாங்கிய ஆதாரங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, விசாரணையின் போது, ​​சூரஜுக்கு பாம்புகளை கையாள்வதில் முன் அனுபவம் இருப்பதும், கடந்த மூன்று மாதங்களில் யூடியூபில் பல முறை பாம்புகள் குறித்து ஆய்வு செய்ததும் கண்டறியப்பட்டது.

இவரது கூட்டாளிகளில் இருவர் போலீசாரால் காவலில் வைக்கப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் திகதி பாம்புகளை கையாளும் சுரேஷ் என்பவரிடம் இருந்து சூரஜ் பாம்பை வாங்கியுள்ளார்.

அதன் பின் அந்த பாம்பை பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றில் வைத்து தனது வீட்டில் உத்ரா இருக்கும் நேரத்தில் வெளியில் விட்டுள்ளார். அந்த சமயம் உத்ரா உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிசயமாக உயிர் தப்பினார்.

இதையும் சூரஜ் தான் பக்க பிளான் போட்டு செய்துள்ளார். அந்த சமயத்தில் பாம்பைக் கண்டு உத்ரா சத்தமிட்டதால், அவர் பாம்பை விரட்டுவது போன்று நடித்துள்ளார். அதன் பின் காலை வரை உத்ரா அருகிலே தங்கியுள்ளார்.

அதன் பின் பாம்பு கடித்தது குறித்து குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களிடம் எச்சரிக்க, அந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சூராஜ், சுரேஷ் மற்றும் மற்றொரு நபர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதில் சூரஜின் நோக்கங்களை சுரேஷ் அறிந்திருந்துள்ளார்.

குற்றச்சாட்டுகளை முதலில் மறுத்த சூரஜ், கடுமையான விசாரணையின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை(இன்று) குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவரது கைது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பதிவு செய்யப்பட்டது. அவர் திங்களன்று(நாளை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.