சமூக இடைவெளியைப் பேணாதோர் நாளை முதல் கைது – நாளை முதல் பொலிஸாருக்கு விஷேட அதிகாரம்

பொது இடங்களில் ஒவ்வொரு நபருக்கும் இடையே ஒரு மீட்டர் தூரத்தை சமூக இடைவெளியாகப் பேணாத நபர்கள் நாளை முதல் பொலிஸாரால் கைது செய்யப்படுவர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் மூலம் பொலிஸாருக்கு இது தொடர்பில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“பொது இடங்களில் சமூக இடைவெளியை கட்டாயமாக பேணுமாறு பொது மக்கள் கோரப்பட்டுள்ளனர். சமூக இடைவெளியை பாதுகாக்காத நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சி.சி.டி.வி காட்சிகள் ஆதாரமாக பயன்படுத்தப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு அதிகபட்சம் ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

நாட்டில் ஒரே ஒரு சட்டம் இருப்பதால் அனைத்து மதங்களும் தங்கள் மதத்தைப் பொருட்படுத்தாமல் இணங்க வேண்டும்” என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண கூறினார்.