ஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்றுமுன்னர் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

நாடு முழுவதும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

நாளை முதல் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை மாத்திரம் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முழுவதும் நேற்றும் இன்றும் ஊரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை காலை 05.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இதேவேளை நாளைய தினம் கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள், விற்பனை நிலையங்களில் பணிகளை மேற்கொள்ளும் போதும் பயணிகள் போக்குவரத்தின் போதும்,

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோய் தொற்று நீக்குதல், முகக்கவசங்களை அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரச, தனியார்துறை நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்படும் ஊழியர் எண்ணிக்கையை தீர்மானிக்கும் அதிகாரம் குறித்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி நாளாந்த பணிகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.