தமிழ் மக்களிற்காக வழக்குகளில் முன்னிலையான சிங்கள சட்டத்தரணிக்கு ஏற்பட்ட நிலை!

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்குகளில் முன்னிலையான சிங்கள சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக சி.ஐ.டியில் முறையிட்டுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் , கடந்த வருடம் தான் செய்த முறைப்பாடு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து தனது புகைப்படங்களை பாவித்து அவதூறு செய்வது குறித்து குற்றவியல் பிரிவு கணினி குற்றவிசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு கடிதம் மூலம் அவர் முறையிட்டுள்ளார்.

அதில் 30.04.2017 அன்று சி 192/19 இலக்க முறைப்பாட்டு தொடர்பாக பொலிசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது வருத்தமளிப்பதாகவும் அந்த கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சி.டி.யின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறைக்கு புகார் அளிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அச்சலா செனவிரத்ன முன்னிலையாகும் வழக்குகளில் பெரும்பாலானவற்றில் எதிர்த்தரப்பில் சிஐடியினரே முன்னிலையாகியிருந்துள்ளனர்.

கொலை, கடத்தல், கப்பம் பெறும் வழக்குகள் தொடர்பாகவே அவர் அதிகமாக முன்னிலையாகியுள்ளார்.

அந்தவகையில் முன்னாள் பாதுகாப்பு பிரதானி ரவீந்திர விஜேகுணரட்ண தொடர்புபட்ட வழக்கான கடற்படையினரால் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன வழக்கு, முத்தொட்டமுல்ல குப்பமேட்டில் கடத்தப்பட்ட இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட வழக்கு, கொட்டஹேனாவில் இருவர் கடத்தப்பட்ட வழக்கு, வெலிக்கடை சிறைக்கைதிகள் கொலை, சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன தொடர்புடைய நீ திமன்ற அவமதிப்பு வழக்கு ஆகிவற்றில் அச்சலா செனவிரத்னவே முன்னிலையாகியிருந்தார்.

இந்த நிலையில் தனது முன்னைய முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்ட நபர்கள், சமூக ஊடகங்கள் வழியாக தன்னை அச்சுறுத்துவதாக மீளவும் புகாரளித்துள்ளார்.

அதோடு சமூக ஊடகங்களில் உள்ள தனது புகைப்படங்களை ஆபாசமாக உருமாற்றி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் தனது அடிப்படை மனத உரிமைகள் பேணப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் சிஐடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.