ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வாகம் செய்ய இவர்கள் இருவருக்கும் உரிமை உண்டு! உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க அவரது அண்ணன் மகளான ஜெ.தீபா, மகனான ஜெ.தீபக்யாருக்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் தங்களை ஜெயலலிதாவின் வாரிசுகள் என அறிவித்து ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தங்களுக்கு உரிமை வழங்க வேண்டும் எனக்கோரி தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் நேற்று தீர்ப்பு கூறினர்.

தீர்ப்பு முழு விவரம் வருமாறு:-

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, மகனான ஜெ.தீபக் ஆகியோர் பிறந்தது முதல் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனில் வளர்ந்து வந்ததாகவும், இந்தநிலையில் திடீரென்று அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் போயஸ் கார்டனில் அனுமதிக்க மறுத்ததாகவும் கூறி உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்பும் அவர்களை போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் பொதுச் சேவையை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவரது பெயரில் இருக்கும் சொத்துகள் சிலவற்றை அறக்கட்டளையாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரை பொறுத்தமட்டில் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசு தாரர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். ஜெயலலிதா பெயரில் உள்ள நிறுவனங்கள், கம்பெனிகள் போன்ற அத்தனை சொத்துகளையும் நிர்வகிக்க ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை அளிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் மக்கள் பணி, சமூக பணியை பொதுமக்கள் அறிந்து கொள்ள அறக்கட்டளையை உருவாக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்து இருப்பதால் ஜெயலலிதாவின் சில சொத்துகளை தங்களது விருப்பத்துக்கு உட்பட்டு அறக்கட்டளைக்காக ஒதுக்கி ஜெயலலிதா பெயரில் பொது அறக்கட்டளையை உருவாக்கி பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு அறக்கட்டளை உருவாக்கப்பட்ட விவரத்தை 8 வாரத்துக்குள் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளதால் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, இருவருக்கும் 24 மணி நேரமும் அவர்களது சொந்த செலவில் பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பு செலவை அவர்கள் ஏற்க முடியாத நிலையில் இருந்தால் ஜெயலிலதாவுக்கு சொந்தமான ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்து அந்த தொகையை வங்கியில் செலுத்தி அதன்மூலம் கிடைக்கும் வட்டியில் இருந்து பாதுகாப்புக்கான செலவுகளை பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.