விடுதலைப்புலிகளின் பிரதேசத்துக்குள் நுழையும் போது பாதுகாப்பு தரப்பினரை தடுமாற வைத்த தொண்டமான்

2001,ம் ஆண்டு காலப்பகுதியில் அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் கால்நடை அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலம்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் “புலிபாய்ந்தகல்” பகுதியில் வீட்டுத்திட்டம் ஒன்றை கால்நடை வளர்பாளர்களுக்கு அமைக்குமாறு வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட பணிப்பாளராக கடமைபுரிந்த கனகசபை பத்மநாதன்( தற்போது அவர் மறைந்துவிட்டார், அம்பாறை மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக 2004,ல் பதவிவகித்தவர்)

ஊடாக விடுதலைப்புலிகள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு முன்வைக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் புலிபாய்ந்தகல் பிரதேசத்தை நேரில் பார்வையிட வருகை தந்தார்.

அப்போது நான் அவரின் அமைச்சுக்கு கீழ் உள்ள கால்நடை உற்பத்தி சுகாதாராத்திணைக்களத்தில் மட்டக்களப்பு கால்நடைவைத்திய அலுவலகத்தில் கால்நடை அபிவிருத்தி அலுவலராகவும், அதேவேளை பகுதிநேர ஊடகவியலாளராகவும்,தினக்கதிர் பத்திரிகை பகுதிநேர செய்தி ஆசிரியராகவும் பணிபுரிந்துகொண்டிருந்தேன்.

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு அழைத்துச்செல்லும் பொறுப்பு என்னிடம் தமிழீழ விடுதலைப்புலிகள் வழங்கி இருந்தார்கள்.

அன்று 2001 திகதி ஞாபகம் இல்லை கிரான் சந்தியில் நான்(பா.அரியநேத்திரன்) ஊடகவியலாளர்களான இரா.உதயகுமார், ஜீ.நடேசன்(தற்போது அவரும் இல்லை, மட்டுநகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர்) இன்னும் சிலரும், வீடமைப்பு அதிகாரசபை மாவட்டபணிப்பாளர் க.பத்மநாதன் உட்பட அவரின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் சகிதம் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் வரவை எதிர்பார்த்து காத்து நின்றோம்.

சரியா 11,மணிக்கு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவருக்கான மேலதிகமான அமைச்சு பாதுகாப்பு படை இரண்டு வாகனங்கள் மொத்தமாக நான்கு வாகனங்களில் கிரான் சந்தியை வந்தடைந்தார்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு பாதுகாப்பு படையினர் செல்ல முடியாது,

எனவே படையினரின் இரண்டு வாகனங்களை கிரானில் விட்டுவிட்டு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தனது சாரதியை பின்சீற்றில் அமரும்படி கூறி அவர் வாகனத்தை செலுத்தினார் அவரின் பக்கத்தில் நான் அமர்ந்துகொண்டேன்.

வீடமைப்பு அதிகாரசபையுன் பணிப்பாளர் க.பத்மநாதனின் வாகனத்தில் ஊடகவியலாளர் இரா.உதயகுமார்,ஜீ.நடேசன் மற்றும் சிலர் இருந்தனர்.

புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் வீடமைப்பு திட்டம் அமைக்கும் இடத்தை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை விடுதலைப்புலிகளின் பொருண்மிய்பொறுப்பாளராக இருந்த விசு, மற்றும் அரசியல் பொறுப்பாளராக இருந்த கரிகாலன் உட்பட பலர் அங்கு சமூகம் தந்து இடத்தை பார்வையிட்டனர்.

அதன்பின் புலிபாய்ந்தகல் பிரதேசம் ஊடாக விடுதலைப்புலிகள் கொக்கட்டிச்சோலைக்கு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானை அழைத்துச்சென்று விடுதலைப்புலிகளின் மாவட்ட செயலகத்தில் ஒரு சந்திப்பை நடத்தினர்.அன்று மதிய போசனம் கொக்கட்டிச்சோலையில் விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டது.

இந்த சந்திப்பிலும் அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் உட்பட பல தளபதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டங்களை முடித்துவிட்டு அன்று பி.ப 4, மணிக்கு கொக்கட்டிச்சோலையில் இருந்து பட்டிருப்பு பாலம் ஊடாக மட்டக்களப்புக்கு வந்தடைந்தோம்.

தமது பாதுகாப்பு வாகனங்கள் இரண்டும் பட்டிருப்பு பாலத்தில் அவரின் வருகைக்காக காத்து நின்றது.

பட்டிருப்பு பாலத்தில் வைத்து மீண்டும் தமது வாகனத்தை சாரதி செலுத்துமாறு கூறி அவர் முன்இருக்கையில் இருந்தார்.

நானும் ஊடகவியலாளர்களான இரா.உதயகுமார்,ஜீ.நடேசன் மற்றும் ஏனையவர்களும் அவர்களை வழியனுப்பினோம்.

கிரானில் இருந்து புலிபாய்ந்தகல், கொக்கட்டிச்சோலை, பட்டிருப்பு பாலம் வரை அவரின் வாகனத்தில் முன் இருக்கையில் நான் இருந்தேன் அவர் வாகனத்தை செலுத்திக்கொண்டு பல விடயங்களை கதைத்து வந்தார்.

நான் 2004,ல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி பாராளுமன்றத்துக்கு சென்றபோது,

வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளராக இருந்த க.பத்மநாதனும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இருந்தார் நாம் இருவரும் அமைச்சர் தொண்டமானிடம் அந்த 2001,ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த சந்திப்பு தொடர்பான விடயத்தை ஞாபகப்படுத்துனோம் புன்முறுவலுடன் ஆமாம் என்று பதில் கூறினார்.

புலிபாய்ந்தகல் வீடமைப்பு திட்டத்திற்கான முயற்சியை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் முயற்சி எடுத்தபோதும் அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அரசு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வீடமைப்பு திட்டம் நடைமுறைபடுத்த அனுமதிக்கவில்லை.

இதனால் புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மூலமாக முன்எடுத்த வீடமைப்புதிட்டம் கைவிடப்பட்டது.

நேற்று (26/05/2020) அமரரான அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் எம்மத்தியில் இல்லை அன்னாரின் அந்த நினைவுப்பதிவை மீட்டுப்பார்பது பொருத்தம் என்பதற்காக இதனை பதிவிடுகிறேன்.

(அமரர் ஆறுமுகம் தொண்டமான், மற்றும் ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன்.அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் க.பத்மநாதன் ஆகிய மூவரும் எம்மைவிட்டு பிரிந்தாலும் அவர்கள் ஆற்றியபணிகள் மறையாது)

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு பாதுகாப்பு படையினர் செல்ல முடியாது தொண்டமான் தனியாக செல்ல முற்பட்ட போது பாதுகாப்பு தரப்பினர் சற்று தடுமாற்றம் அடைந்ததாகவும் காரணம் பாதுகாப்பு படையினரிற்கு பொறுப்பானவரிடமான அனுமதியை கொழும்பிலிருந்து பெறாமல் குறித்த இடத்தில் வைத்து கூறிவிட்டு சென்றதால் இந்த தடுமாற்றம் ஏற்பட்டதாக இச் சந்திப்பில் பங்கு பற்றிய மற்றொரு முக்கியஸ்தர் தெரிவித்தார்.

உண்மைகள் உறங்காது.!

பா.அரியநேத்திரன்