பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

நாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

சுகாதார நிபுணர்களுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அதிகாரிகள் இது தொடர்பில் தற்போது ஆராய்வுகளை மேற்கொண்டு வருவதுடன் பொதுமக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் போக்குவரத்துக்கள் என்பவை தொடர்பில் அவர்கள் ஆராய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் சமூக இடைவெளி தொடர்பிலும் அவர்கள் ஆராய்ந்துக்கொண்டிருப்பதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் பொதுபோக்குவரத்துக்களே சவாலாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் உரிய உறுதிப்பாடு கிடைக்காதுபோனால் பாடசாலைகளை திறப்பதில் எவ்வித பயன்களும் இல்லை என்றும் இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா அபாயத்தின் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கையை படிப்படியாக மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, பாலர் பாடசாலைகள் மற்றும் குழந்தைகளின் பகல் நேர பராமரிப்பு மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்களை, சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இவை மீள இயங்கும்போது இந்த நடைமுறைகள் கட்டாயமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் வளாகத்தின் நுழைவாயிலில் கைகழுவும் வசதி கட்டாயமாக ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அங்கு பணியாற்றுபவர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

எனினும், குழந்தைகளிற்கு முகக்கவசம் அணிய ஊக்குவிக்கக்கூடாது. சுவாசப் பாதை நோய் ஆபத்து உள்ள இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள், முகக்கவசம் அணிவது ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆயினும், 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு முகக்கவசம் பற்றிய கருத்தை அறிமுகப்படுத்துவது நல்லது எனவும் குறிபிடப்பட்டுள்ளது.

இதேவேளை வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய குழு நடவடிக்கைகள், விழாக்கள், சிறப்பு நிகழ்வுகளை இரத்து செய்ய, அல்லது ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை நோய் வாய்ப்பட்டால் தனிமைப்படுத்தக்கூடிய அறை அல்லது இடத்தை தயார் செய்ய வேண்டும் என குழந்தைகள் பராமரிப்பு மையங்களிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

பராமரிப்பு மையங்களில் குழந்தைகளின் மெத்தைகள் ஒன்றுக்கொன்று எதிராக வைக்கப்படக்கூடாது என்றும், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், விளையாட்டு உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாலர் பாடசாலை மற்றும் குழந்தைகள் தின பராமரிப்பு மையமும், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதை உறுதிசெய்ய அறிக்கை தயாரித்து, சுகாதார மருத்துவ அதிகாரியிடமும், குறிப்பிடப்படும் பிறிதொரு உள்ளூர் அதிகார நிர்வாகத்திடமும் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மையங்களிற்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்,

இலகுவாக கழுவக்கூடிய ஆடைகளை மட்டும் குழந்தைகளிற்கு அணிய வேண்டும் என்பதுடன் அவசியமற்ற ஆபரணங்கள், ரிபன்கள் குழந்தைகளிற்கு அணியக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கிருமிநாசினி அல்லது சோப் பாவித்து குழந்தைகளின் புத்தகப்பை மற்றும் உபகரணங்களை கிருமி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.