இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விளைநிலங்களில் பெரும் அழிவு

கொரோனா வைரஸ் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, வடமேற்கு மாநில விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலத்தின் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கொரோனாவினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலத்தின் 11 மாவட்டங்களுக்கு வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு தொடர்பான எச்சரிக்கையும் தற்போது விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வெட்டுக்கிளிகளின் தாக்குதலைத் தடுப்பது தொடர்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென டெல்லி அரசு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் மிக நீண்ட தூரம் பறந்து செல்லும் வல்லமை கொண்டவை என்பதால், அவை எங்கே பறந்து செல்கின்றன என்பதை கண்காணிப்பது கடினமானது என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.