திருநெல்வேலி பொதுச் சந்தை திங்கள் முதல் வழமைக்கு – வியாபாரிகளுக்கு இன்று இடம் வழங்கப்பட்டது

திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு இன்று நல்லூர் பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்த நிலையில் நாளைமறுதினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மீள திறப்பதற்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலரினால் அனுமதியளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை நாளைமறுதினம் திங்கட்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்து விடப்படவுள்ளது. இன்றைய தினம் நல்லூர் பிரதேச சபையினரால் திருநெல்வேலி சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் பணி முன்னேடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தையில் 245 க்கும் மேற்பட்ட மரக்கறி வியாபாரிகள் வியாபார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

கோரோனா தாக்கத்தின் காரணமாக சமூக இடைவெளியை பேணவேண்டிய நிலை காணப்படுகின்றமையினால் பொதுச் சந்தைகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் பொதுச் சந்தைக்கு வரும் பொது மக்களுக்கிடையில் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலையில் இடஒதுக்கீடுகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற கூடியவாறு முன்னெடுக்கப்பட்டது.