சஜித் தரப்பை வெளியே அனுப்பி கூடாரத்தை காலியாக்கியது ஐ.தே.க!

சஜித் பிரேமதாச உள்ளிட்ட 99 பேர் ஐ.தே.கவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.கவின் விசேட செயற்குழு கூட்டம் நேற்று கட்சி தலைமையகமாக சிறிகோத்தாவில் நடந்ததன் பின்னர், கட்சியின் பேச்சாளர் வஜிர அபேவர்த்தன இதனை ஊடகங்களிற்கு அறிவித்தார்.

நேற்று (30) காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடந்தது.

வஜிர ஊடகங்களுடன் பேசியபோது,

கட்சி யாப்பு விதிகளிற்கு முரணாக நடந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் என 99 பேர் நீக்கப்பட்டுள்ளார்கள். கட்சி யாப்பை மீறி செயற்பட்டது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. எனினும், அவர்கள் அதற்குரிய பதிலை வழங்காததன் காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்பட முன்வருவார்களேயானால் மன்னிப்பு வழங்கி அவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். திரும்பி வர விரும்புபவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க செயற்குழு தயாராகவே இருக்கிறது.

வேறு கட்சிகளிலும், அணிகளிலும் இணைந்ததை துறந்ததற்கான எழுத்துமூல உத்தரவாதத்தை வழங்கி, மன்னிப்பு கோரும் பட்சத்தில் அவர்களை இணைத்துக் கொள்ள கட்சி தயாராகவே உள்ளது என தெரிவித்தார்.

இதேவேளை, கட்சியின் பிரதித்தலைவராக ரவி கருணாநாயக்கவும், செயலாளராக அகிலவிராஜ் காரியவசமும் நியமிக்கப்பட்டுள்ளதாக, ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

-pagetamil-