தேர்தல் தொடர்பில் அதி முக்கிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

பொதுத்தேர்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடத்துவது, நாடாளுமன்றத்தை கலைப்பதென ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுக்கலாமா இல்லையா என்பது குறித்து, கடந்த 10 நாட்களாக நடந்த விவாதங்களின் முடிவில் இன்று இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்கள் புவனெக அலுவிகார, சிசிர டி ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன, விஜித மலல்கொட ஆகியோர் அடங்கிய குழாம் கடந்த 10 நாட்களாக இந்த மனுக்களை பரிசீலித்தது.

மனுக்களின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, சட்ட மாஅதிபர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தை கலைத்தமை, தேர்தலுக்கு அறிவிப்பு விடுத்தமை தொடர்பில் சட்ட வலுவற்றதாக கருதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேசமயம், இந்த மனுக்கள் நியாயமற்றதென தெரிவித்த பிரதிவாதிகள் தரப்பினர் சகல மனுக்களையும் முற்றாக நிராகரிக்க வேண்டுமென தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில் அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.