நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி வெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளை அனுப்பிய கடிதம்-புகைப்படம்! அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்

தமிழகத்தில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வேறொரு நபருடன் இருப்பது போல் மார்பிங் செய்து அனுப்பிய இளைஞர் உட்பட 3 பேர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கேசவபுரம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இவர் தக்கலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வெட்டூர்ணிமடம் எம்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்த எபினேசர் என்பவருக்கும் இவருக்கும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணநிச்சயதார்த்தம் நடைபெற்றது.

எபினேசர் வெளிநாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் வரதட்சணையாக பணம் மற்றும் நிலம் தருமாறு பெண் வீட்டில் கேட்டுள்ளார். அதற்கு பெண்வீட்டார் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதன் காரணமாக, நிச்சயதார்த்தம் அன்று குறைந்த அளவில் முன்பணமாக பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்துள்ளார்.

இதையடுத்து எபினேசர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இந்த சூழ்நிலையில் எபினேசருக்கு வசதிபடைத்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது தந்தை இஸ்ரவேல் மற்றும் தாயார் பிளாரன்ஸ் ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

இதனால், இந்த திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று திட்டம் போட்ட எபினேசர், நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்ணை பற்றி அவதூறாக ஒரு கடிதத்தை எழுதியும், இளம் பெண்ணின் புகைப்படத்தை வேறொரு நபருடன் இருப்பதுபோல் மார்பிங் செய்து பெண் வீட்டாருக்கு, வெளிநாட்டில் இருந்த படி அனுப்பியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து புகாரின் அடிப்படையில் எபினேசர், அவரது தந்தை இஸ்ரவேல், தாயார் பிளாரன்ஸ் ஆகியோர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.