குழந்தை பிரசவித்த இளம் தாய் 4 நாட்களின் பின் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு!


யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளந்தாய் ஒருவர் குழந்தையை பிரசவித்த பின்னர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மீசாலை மேற்கைச் சேர்ந்த 27 வயதுடைய லக்சன் கிருத்திகா என்ற விவசாயப் போதனாசிரியரான இளந்தாய், கடந்த 23 ஆம் திகதி பிரசவத்திற்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த தாய் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதன் காரணமாக கடந்த 25 ஆம் திகதி அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2017 ஆம் ஆண்டில் யாழ் குடாநாட்டில் டெங்கு நோயாளர்கள் 5783 பேர் இனங்காணப்பட்டதாகவும், அதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி க. நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரப் பகுதி, சாவகச்சேரி, உடுவில், சண்டிலிப்பாய், தெல்லிப்பளை ஆகிய இடங்கள் டெங்கு நோயால் அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் வைரஸ் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட முல்லைத் தீவைச் சேர்ந்த பெண் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் மரணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.