ரயில் சேவைக்கான ஆசன முற்பதிவுகள் நாளை முதல் ஆரம்பம்

சகல அலுவலக தொடருந்து சேவைகள், இரவுநேர தபால் தொடருந்து சேவை மற்றும் தூர இடங்களுக்கான தொடருந்து சேவை என்பன எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள நிலையில் நாளை முதல் ஆசனங்களைப் பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் கடுகதி ரயில் சேவை மற்றும் கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை இடையேயான குளிரூட்டப்பட்ட நகர் சேர் சேவைகள் என்பன திங்கட்கிழமை ஆரம்பிக்கபடமாட்டாது என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் வி.எஸ் பொல்வத்தகே குறிப்பிட்டுள்ளார்.

தொடருந்துப் பயணத்திற்கான ஆசனங்களை ஒதுக்கிகொள்ளும் வசதி வழமைப் போன்று நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து சேவை நேர அட்டவணையில் ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் அது தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து பயணங்களின் போது கோவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றுமாறும் ரயில்வே திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் தொடருந்து பயணங்களை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.